Tuesday, September 18, 2012

மரணம் தரும், வலியும் - மரணம், தரும் வலியும்





இயற்கை முறித்துப்போட்ட என் நண்பர்களை நினைக்கையில்  என் கண்கள் எப்போதும் குளமாகிவிடும்.எல்லோருக்குமே  அது அகால மரணம் என்பதும் எல்லோருடைய கனவுகளும் சிதைக்கப்பட்டவை என்பதும் வலி ஏற்படுத்தும் ஒன்று ஒரு மரணம் நமக்கு ஏற்படுத்தும் வலியை விட இறப்பவர்களுக்கு ஏற்படுத்தும் வலி மிகக் கொடுமையானது. வாழ்க்கையின் ஓரத்துக்கு தள்ளப்பட்டவர்களுக்குத்தான் வாழ்க்கையின் மதிப்பு அதிகம் தெரியும். அங்கிருந்தும் விலக்கப்ப்படும்போது அது பொய்யான மதிப்பீடாகி அவர்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்கின்றனர். மரண வலியை insignificant ஆக மாற்றும் நிகழ்வுகள் நமக்கு தெரியா விட்டாலும் அதன் பின்புலங்கள் நமக்கு அதிர்ச்சியூட்டுபவையே. 
வாழ்வில் தோல்வியுற்று எல்லோருக்கும் பாரமாகி மரணத்தை தழுவிக்கொண்ட ஒரு நண்பனும் வாழ்வின் எல்லாப்பக்கங்களிலும் வெற்றியையே பார்த்த மற்றும் ஒரு நண்பனும் தற்கொலை எனும் ஒரு புள்ளியில் வாழ்க்கையை முடித்துக்கொண்டது என் வாழ்க்கையில் நான் சந்தித்த அதிக பட்ச அதிர்வுகளில் இரண்டு. அதிலும் வெட்டியாக சுற்றி குடும்பத்தாரால் உரிமைகள் மறுக்கப்பட்டு விரக்தியின் எல்லைக்கே சென்று வாழ்க்கையை முடித்துக்கொண்ட என் நண்பனின் மரணம் என்னை அச்சப்படுத்திய ஒன்று. அதைப் பார்க்க கூட நான் துணியவில்லை.மற்ற யாருக்கும் எந்த அதிர்வையும் ஏற்படுத்தாத அவன் மரணத்தின் பின்புலங்கள் மிகக் குரூரமானவை என்று நான் அறிந்த போது எல்லோரும் சேர்ந்து அவனை மரணக்குழிக்கு தள்ளிச் சென்றது தெளிவாகத் தெரிந்தது.இது குறித்த எந்த ஒரு குற்ற உணர்வும் இல்லாமல் பெருந்தேவியின் இணையத்தில் ஒரு தற்கொலையில் வருவது போல் எல்லோருமே வெகு இயல்பாய் நடந்து கொள்வதில் காலம் அவனை வேகமாய் தள்ளிக்கொண்டு போனது மட்டுமில்லாமல் அவனும் காலத்தை அவசரப்படுத்தி தள்ளிச் சென்றது போல் தோன்றுகிறது. என்வரையில் அவன் நித்தமும் நினைக்கப்படுகிற ஜீவனாய் ஆனது பாசாங்கோ எதிபார்ப்போ இன்றி என்மீது அவன் காட்டிய அன்பிற்கு கைம்மாறாகத்தான் நான் நினைத்துக்கொள்கிறேன்.
         மற்றொரு நண்பனும் என் அன்பிற்கினியவன். எல்லாவற்றிலும் வெற்றியே பெற்றவன் நல்ல பள்ளியில் அடிப்படைக்கல்வி மிக நல்ல கல்லூரியில் இளநிலை மருத்துவம் அதனினும் நல்ல கல்லூரியில் முதுநிலை மருத்துவம் காதலில் வெற்றி பெற்று திருமணம் என சென்று கொண்டிருந்த அவன் வாழ்க்கை சட்டென ஒரு தற்கொலையில் முடிந்து போனது எப்போதும் சிரித்தவாறு இருக்கும் அவன் முகமும் குழந்தைத்தனமான அவன் விளையாட்டுகளும் என்றைக்கும் மறக்க முடியாதவை. மரணத்தின் புற வலியை அவன் தன் மருத்துவப் படிப்பு குறைத்திருக்கக் கூடும் மயக்கவியல் நிபுணர்கள் மரணத்தில் கூட ஒருவித sophistication பார்ப்பவர்கள் மரணம் தரக்கூடிய மருந்துகளின் காக்டெயிலை vein வழியாக க்ளுக்கோஸ் ட்ரிப்புடன் ஏற்றிக்கொண்டு படுக்கையில் அமைதியாக உறங்கியபடியே உயிர் விடுவார்கள். ஆயின் மரணத்துக்கு முந்தைய மனவலியை அது ஒரு போதும் குறைத்திருக்கப்போவதில்லை. ஏனெனில் இத்தகைய மரணங்கள் மிக மெதுவாக அவர்களின் நினைவுகளை நீக்கி மீள முடியாத ஒரு நெடும்பயணத்தில் அவர்களை கொண்டு சேர்க்கும் நினைவு தவறும் முன் ஒரு நிமிடம் வாழ ஆசைப்பட்டாலும் மீண்டு வந்துவிடலாம் அதையும் மீறி நிகழும் அவர்கள் மரணம் அவர்களின் வலியின் அளவையே நமக்கு உணர்த்தும் குழந்தையாய் வாழ்ந்தவன் சட்டென தற்கொலை செய்து கொண்டது அவனை சுற்றியிருந்தவர் குறித்த மதிப்பீடுகளை வெகுவாய் குறைத்துவிட்டது
           தோல்வியையும் வெற்றியையும் மாறி மாறி சந்தித்த என் சிநேகிதியின் மரணமும் வலி மிக்கதே. இங்கு பதிவேற்ற இயலா பல நிகழ்வுகளை தன் வாழ்வில் கண்டவள் தன் வலிகள் தன் கனவுகள் என அனைத்தையும் என்னுடனும் என் நண்பனுடனும் பகிர்ந்து கொண்டவள் பின் அவனையே வாழ்க்கை துணையாகவும் ஆக்கிக்கொண்டாள். அழகிய மகவிற்கு பிறகு அவளுக்கு நேர்ந்த துர்மரணம் மிகக் கொடூரமானது. அது குறித்து என் நண்பனுடன் இன்றுவரை எனக்கு பேசக்கூட முடிந்ததில்லை.
               இயல்பில் இந்த மூவருமே ஒரு விதத்தில் குழந்தைத்தனமான மனநிலை கொண்டவர்கள் காலமும்சுற்றி இருந்தவர்களும் சுழற்றி அடித்த வேகத்தில் வாழ்வின் ஓரத்துக்கு தள்ளப்பட்டவர்கள். நம்பியவர்களின் புறந்தள்ளல் அவர்களுக்கு தீராத வலியை ஏற்படுத்தியிருக்க கூடும். ஒரு மரணத்தின் மூலம் அந்த வலியை அவர்கள் வென்றுவிடலாம் என்றே அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால் உண்மையில் தீராத ஒரு வலியை அவர்களை நேசிக்கும் ஒரு சிலருக்கு  அவர்களே உண்டாக்கி செல்கிறார்கள் தங்கள் மரணம் மூலமாக  

No comments:

Post a Comment